அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் இறையருட்கள்.


“எவர் அல்லாஹ்வையும், அவனது ரெஸுலையும் (நபி (ஸல்) அவர்களையும்) முழுமையாகப் பின்பற்றுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களான நபிமார்கள், ஸித்திக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்; இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இது அல்லாஹ் விடமிருந்து வரும் அருளாகும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றன.” (4:70,71) 

முஸ்லிம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இறையருட்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சூரா பாத்திகாவில் வந்துள்ள அதே சொற்கள் அதாவது சிராத்தே முஸ்தகீம் (நேரான வழியைக்) காட்டுதல், நேரான வழியும் இறையருட்களைப் பெற்றவர்களின் நேரான வழியாகும். மேலும் இறையருட்களைப் பெற்றவர்கள் என்பதையும் விளக்கிக் கூறிவிட்டது. அதாவது நபி, சித்தீக், ஷஹீது, ஸாலிஹ் ஆகியோர். சூரா பாத்திகாவில் எத்தகைய மேலான அருட்கொடைகளை வேண்டுமாறு முகம்மதியா உம்மத்திற்கு கட்டளையிடப்பட்டுள்ளதோ மார்க்க அளவில் அதன் கருத்து, உயர்ந்த ஆன்மீகப் பதவிகளாகும். அவைகளனைத்தும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது. 

சிலர் இந்தத் திருவசனத்திற்குப் பொருள் கூறும்போது ‘அவர்கள் (அல்லாஹ்வையும், திருத்தூதரையும் பின்பற்றுபவர்கள்) அருள் பெற்றவர்களோடு இருப்பார்கள்; அருள் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். என்று கூறுகின்றனர். அல்லாஹ்வையும், பெருமானார் (ஸல்) அவர்களையும் முழுமையாகவும் பின்பற்றுபவர்களைப் பற்றிய அல்லாஹ்வின் இந்த அறிவிப்பு சாதாரணமான ஒன்றல்ல. இதற்கு முன்னர் அல்லாஹ்வையும் ஹஸ்ரத் மூஸா (அலை) அல்லது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அல்லது ஹஸ்ரத் தாவூத் (அலை) போன்ற நபிமார்களையும் பின்பற்றுபவர்களைப் பற்றிய அறிவிப்பு இருந்தது. ஆனால் இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களைப் பற்றிக் கூறப்படுகிறது. எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களை பின்பற்றியவர்களிடம் இறைவன் ‘நீங்கள் எவ்வாறு செய்தாலும் உங்களுக்கு இறையருள் கிடைக்காது. மாறாக இறையருள் பெற்றவர்களோடு இருப்பதற்குரிய தகுதியை மட்டும்தான் பெறுவீர்கள்! என்று அல்லாஹ் கூறியதுண்டா? இல்லையே? அவ்வாறிருக்கும்போது இந்த ஆயத்திற்கு மட்டும் ஏன் இப்படிப் பொருள் கொள்கிறீர்கள்? எப்படிப்பட்ட அநியாயமான பொருள் கொடுக்கப்படுகிறது. இது பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் திருக்குர்ஆன் மீதும் சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டாகும். இது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கௌரவத்திற்கு ஏற்படுத்தும் களங்கமாகும். 

எல்லா நபிமார்களை விடச் சிறந்தவரும், மகத்துவமிக்கவரும், எல்லா அருட்களின் உரைவிடமுமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றினாலும், அவர்கள் இறைவனுடைய அருள் பெற்றவர்களாக ஆகமாட்டார்கள்; அவர்கள் அருள் பெற்றவர்களோடு வைக்கப்படுவார்கள் என்று விளக்கம் கூறுவது எந்த அளவுக்குப் பொய்யானதும் உண்மைக்கு மாறானதுமான ஒரு கருத்தாகும். இங்கு பயன் படுத்தப்பட்டிருக்கும் மஅ என்ற சொல்லுக்குத்தான் இப்படி தவறான பொருள் கொடுக்கப்படுகிறது. இதனை திருக்குர்ஆன் கண்டிக்கிறது. 

திருக்குர்ஆனில் ஓரிடத்தில் ‘வதவப்பன மஅல் அப்றார்’ ‘இறைவா! எங்களை நல்லடியார்களுடன் மரணிக்கச் செய்வாயாக!’ என வந்துள்ளது. இதற்கு ‘நல்லடியார்கள் மரணிக்கும் பொழுது அவர்களோடு சேர்த்து எங்களையும் மரணிக்க செய்வாயாக என்றா பொருள் கொள்ள முடியும்? எப்படியெல்லாம் நீங்கள் முகம்மதிய உம்மத்தை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கு, எங்களை நல்லடியார்களாக – நல்லடியார்களைச் சேர்ந்தவர்களாக மரணிக்கச் செய்வாயாக!’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயொழிய நல்லடியார்களுடன் சேர்த்து எங்களையும் மரணமடையச் செய் என்று பொருள் கொள்ளக் கூடாது.

‘மஅ’ என்ற சொல்லைப் பன்மையோடு சேர்த்துப் பயன்படுத்தும் பொழுதும், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களோடு சேர்த்துப் பயன்படுத்தும் பொழுதும் பொதுவாக, ‘மின்’ என்ற பொருள்தான் கொடுக்கப் படுகிறது. ஆனால் வேறு இனத்தைச் சேர்ந்தவர்களோடு ‘கூட’, ‘உடன்’ என்ற பொருள்வரும். உதாரணமாக, 

‘இன்னல்லாஹா மஅஸ்ஸாபிரீன்’ 

‘நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ இங்கு அல்லாஹ்வும் மனிதனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாத காரணத்தினால், ‘அல்லாஹ் பொறுமையுள்ளவர்களைச் சேர்ந்தவனாக இருக்கிறான்’ என்று பொருள் கொள்ளமுடியாது. ‘கழுதை சமுதாயத்துடன் வந்தது’ என்று கூறினால் கழுதை சமுதாயத்தை சேர்ந்தது என்று பொருளில்லை. ஏனென்றால் இரண்டும் தனித்தனி இனங்களாக இருக்கின்றன. 

ஆனால், ‘ஸைத் என்பவர் நல்லவர்களோடு இருக்கிறார்; ‘என்மீது நேசம் கொண்டவர்களுடன் நான் இருக்கிறேன்’ என்றால், ‘நான் அவர்களைச் சேர்ந்தவனாக இருக்கிறேன்’ என்றுதான் பொருள் இப்படிப்பட்ட இடங்களில் வரும் சொல்லுக்கு ‘மின்’ என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். 

திருக்குர்ஆனே இங்கு ‘மஅல்லதீன அன் அமல்லாஹு அலைஹிம்’ (அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களுடன்) என்று கூறியதற்குப் பிறகு அதற்க்கு விளக்கமாக, ‘மினன்னபியீன் ‘(நபிமார்களைச் சேர்ந்தவர்) என்று கூறியிருக்கிறது. இங்கு ஏன் ‘மா அன் நபிய்யீன்’ என்று கூறப்படவில்லை? எனவே ‘மஅ’ என்ற சொல்லுக்கு இங்கே ‘மின்’ என்றே பொருள் கொள்ள முடியும். 

இப்போது மஅ என்பதற்கு உடன் இருத்தல் என்ற பொருள் மட்டும்தானே தவிர அப்பிரிவினர்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் என்பதல்ல என்றால், இந்த விளக்கத்தின் படி, முஸ்லிம்கள் நபியாக மாட்டார்கள், நபிமார்களுடன் இருப்பார்கள். சித்தீக்குகள் (உண்மையாளர்கள்) ஆக மாட்டார்கள். உண்மையாளர்களுடன் இருப்பார்கள். அவ்வாறே ஷஹீது (உயிர்த் தியாகிகள்) ஆக இருக்கமாட்டார்கள். ஆனால் உயிர் தியாகிகளுடன் இருப்பார்கள். மேலும் ஸாலிஹீன் (நல்லடியார்கள்) ஆக மாட்டார்கள். நல்லடியார்களுடன் இருப்பார்கள் என்று இந்த வசனத்திற்குப் பொருளாகிவிடும். இதை விட பெரும் தவறான பொருள் என்ன இருக்க முடியும்? இந்த உம்மத்தில் நபி போகட்டும், சித்தீக் (உண்மையாளர்)கள், ஷஹீது (உயிர்த் தியாஹி)கள், ஸாலிஹ் (நல்லடியார்)கள் கூட தோன்றமாட்டார்கள் என்பதைவிட முகம்மதியா உம்மத்திற்கு வேறு என்ன அவமானம் இருக்கமுடியும்?

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு உம்மத்தி நபி வருவார்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 187 இல் இறுதி நபித்துவம் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி இறுதித் தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும் தூதரும் வரவே முடியாது என்பதற்கு இவ்வசனங்கள். (4:79,170, 7:158, 9:33, 10:57,108, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) சான்றுகளாக உள்ளன. 

மனித குலத்திற்கே உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன் 4:79, 4:170, 6:19, 7:158, 14:52, 33:40) என்பதும் அவர்களுக்குப் பின் நபியோ தூதரோ வரமாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. 

நம் விளக்கம்: 

பி.ஜே காட்டியுள்ள வசனங்கள் முழுவதையும் படித்தால் அவற்றுள் 4 வகையான கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இந்த வசனங்களின் பொருளை இத்தலைப்பின் இறுதியில் பார்க்கவும். நான்கு வகையான கருத்துக்கள். 

1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் அனுப்பப்பட்ட தூதர் ஆவார். 

2) திருக்குர்ஆன் முழு உலகுக்கும் அனுப்பட்ட வேத நூல். 

3) நபி (ஸல்) அவர்கள் நபிமார்களுள் காத்தம் ஆவார். 

4) நபித் தோழர்களுடன் சேராத பிற மக்களுக்காக (ஒரு தூதரை அனுப்புவான்) 

(அ) நபி (ஸல்) அவர்கள் மனித இனம் முழுமைக்கும் அனுப்பப்பட்டவர். அவர் கொண்டு வந்த வேதம் முழு உலகுக்கும் இறுதி வரை வேதம் என்பதால், இனி மேல் உலகுக்கு ஒரு வேதம் வராது என்று ஏற்றுக் கொள்ளலாமே தவிர அவர்கள்தான் இறுதி நபி என்று ஆகாதே!

(ஆ) அப்படி என்றால் இதற்கு முன்னர் வந்த நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வந்துள்ளனர். அவர்களுக்கு வந்த வேதமும் அக்காலத்துக்கு, அம்மக்களுக்கு முழுமையான வேதம்தான்.எனவே அந்த சமுதாயத்தில் ஒரே ஒரு தூதர் மட்டும் வந்திருக்க வேண்டும். வேறு எந்தத் தூதரும் வரவில்லை என்பதனை உலகில் யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? 

மூஸா நபி (அலை) அவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டும் வந்த ஒரு தூதர். அவருக்கு இறைவன் தௌராத் எனும் வேதத்தை கொடுத்தான். அது அம்மக்களுக்கு அக்காலத்துக்கு வேண்டிய முழுமையான வேதமாகத்தான் இருந்தது. (6:155 ) அனால் மூஸா நபியின் அடிச்சுவட்டில் தௌராத்தைப் போதிக்க ஏராளமான நபிமார்கள் வந்துள்ளனர். (2:88) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

ஆக ஒரு சிறிய சமுதாயாத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முழுமைபெற்ற வேதத்தைப் போதிக்க பல நபிமார்கள் வந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் நபியாக அனுப்பபட்டுள்ளதாலும் முழு உலகுக்கும் இறுதிவரை முழுமையான வேதமாக திருக்குர்ஆன் இருப்பதாலும் அவர்களுக்குப் பிறகு நபி வரத் தேவையில்லை என்பது தவறாகும். 

(இ) அல்லாஹ்வின் பார்வையில் நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி அவர்களுக்குப் பின்னர் எந்த நபியும் வரமாட்டார்கள் என்றால் அல்லாஹ் தன் திருமறையில் தெள்ளத் தெளிவாக பல இடங்களில் முஹம்மது நபிதான் இறுதித் தூதர். இனிமேல் எந்தத் தூதரும் வரமாட்டார் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி ஒரு இடத்தில் கூட சொல்லவில்லையே. பி.ஜே மேலே எடுத்துக் காட்டிய வசனங்களில் இப்படி எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? இல்லையே 

(ஈ) லா நபிய்ய பஅதி என்று நபிமொழிகளில் வந்துள்ளதே. அதற்கு எனக்குப் பிறகு நபி இல்லை என்று தானே பொருள் என்று கேட்டால் அந்த நபிமொழி இடம் பெற்றுள்ள நூல்களில் விளக்கவுரை நூல்களில் லா நபிய்ய பஅதி என்பதற்கு சரீஅத்துடைய எந்த நபியும் இல்லை என்றுதான் பொருள். இனிமேல் புதிய சரீஅத்துடன் எந்த நபியும் வரமாட்டார் என்று விளக்கம் தந்துள்ளார்கள் (அல்யவாகியது வல் ஜவாகிர், பாகம் 2, பக்கம் 24 இமாம் ஷிஹ்ராணி (ரஹ்). எனவே தௌராத்தைப் போதிக்க மூஸா நபியின் அடிச்சுவட்டில் ஏராளமான நபிமார்கள் வந்தது போல் திருககுர்ஆனைப் போதிக்க நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நபிமார்கள் வருவார்கள் என்பதுதான் திருக்குர்ஆனின் கருத்தாகும்.

உ) காத்தம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் வந்த மார்க்க அறிஞர்கள் தந்துள்ள விளக்கத்தைக் காண்போம். 

காத்தமுன்னபியீன் என்பதற்கு இறுதி நபி எனப் பொருள் கொள்பவர்கள் காத்தம் என்ற சொல்லுடன் நபிய்யீன் (நபிமார்கள்) போன்று ஒரு பன்மை பெயர்ச்சொல் சேர்ந்து, அதற்கு காலத்தால் இறுதி என்ற பொருள் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஒரேயொரு எடுத்துக்காட்டை ஹதீஸ்களிலிருந்தோ, அரபி நூல்களிலிருந்தோ, அரபி பத்திரிகையிலிருந்தோ காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. 

காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச் சொல் சேரும் போது அதற்கு சிறப்பு என்பதே பொருள் என்பதற்கான பல உதாரணங்களை ஹதீஸ்களிலிருந்தும், அரபி நூல்களிலிருந்தும், பத்திரிகையிலிருந்தும் நாங்கள் காட்டுகிறோம், இதோ சில உதாரணங்கள். 

நபிமொழிகள்: 

1) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப் பார்த்து, அலியே! நீர் காத்தமுல் அவ்லியா (இறைநேசர்களில் சிறந்தவர்) ஆவீர். நான் காத்தாமுல் அன்பியா (நபிமார்களில் சிறந்தவர்) ஆவேன் என்று கூறினார்கள். (ஆதாரம் ஸஹ்பின் ஸஹீது தைலம் தப்ஸீருஸ் ஸாபி – அல் அஹ்ஸாப்) 

இந்த நபிமொழியில் வந்துள்ள காத்தமுல் அன்பியா என்பதற்கு நபிமார்களுள் இறுதியானவர் என பொருள் கொண்டால், ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களை இறுதியான வலியுல்லாஹ் என்றும் அவர்களுக்குப் பின்னர் எந்த வலியும் (இறைநேசரும்) தோன்றவில்லை எனவும் தவறாக நம்ப வேண்டியது வரும். 

2) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களை காத்தமுல் முஹாஜிரீன் (ஹிஜ்ரத் சிதவர்களில் சிறந்தவர்) எனக் குறிப்பிட்டார்கள். (ஆதாரம் கன்ஸுல் உம்மால், பாகம் 13, பக்கம் 519) 

அரபி மொழி நூல்கள் / பத்திரிகையிலிருந்து.....

1) காத்தமுஷ் ஷுஅரா : புகழ்பெற்ற அரபி கவிஞராக திகழ்ந்த அபுதமாம் (கி.பி 788-845) என்பவரைக் குறித்து காத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: வாபியத்துல் அயான், பாகம் 1, பக்கம் 123, கெய்ரோ, எகிப்து) 

2) காத்தமுல் அவ்லியா: இமாம் ஷாபி (ரலி) அவர்களை காத்தமுல் அவ்லியா – இறை நேசர்களுள் சிறந்தவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் துஹ்பதஸ் ஸுன்னியா, பாகம் 45) 

3) காத்தமுல் அயிம்மா: எகிப்தைச் சேர்ந்த இமாம் அப்தா (1845-1905) காத்தமுல் அயிம்மா – இமாம்களுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார். (நூல், தப்ஸீர் அல் பாத்திஹா, பக்கம் 148) 

4) காத்தமுல் முஜாஹிதீன்: அஸ்ஸய்யத் அஹ்மத் ஸனூஸி என்பவர் காத்தமுல் முஜாஹிதீன் – போராளிகளுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார். (பத்திரிக்கை : அல் ஜாமியத்துல் இஸ்லாமிய்யா, பாலஸ்தீன், நாள் : 27, முஹர்ரம், ஹிஜ்ரி 1352) 

5) காத்தமத்துல் முஹக்கிகீன்: அஹ்மத் பின் இத்ரீஸ் என்பவரை குறித்து காத்தமுல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் ஆகாதுன் நபீஸ்) 

6) காத்தமுல் முகத்திஸீன்: டில்லியைச் சேர்ந்த இறைநேசர் ஸாஹ் வலியுல்லாஹ் அவர்கள் காத்தமுல் முஹத்திஸீன் – ஹதீஸ் கலையில் சிறந்தவர் என அழைக்கபடுகிறார்கள். (நூல்: இஜாஸா நாபியா பாகம் 1) 

7) காத்தமுல் ஹுப்பாஸ்: அல் ஸைஹு ஷம்சுத்தீன் அவர்களை காத்தமுல் ஹுப்பாஸ் – திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் தஜ்ரிதுல் ஸரீஹ் முகத்திமா, பக்கம் 4) 

8) காத்தமுல் புக்கஹா: அல் ஸைஹு நஜீத் என்பவரை கத்தமுள் புக்கஹா – மார்க்க சட்ட வல்லுனர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (ஆதாரம்: ஸிராத்தல் முஸ்தகீம் யஹ்பா, நாள் : 27 ரஜப் ஹிஜ்ரி 1354) 

9) காத்தமுல் முபஸ்ஸிரீன்: அல் ஸைஹு ரஷீத் ரஸா என்பவரை காத்தமுல் முபஸ்ஸிரீன் – திருக்குர்ஆன் விரிவுரையாளர்களுள் சிறந்தவர். என அழைத்துள்ளனர். 

10) காத்தமுல் ஹுக்காம்: சிறந்த ஆட்சியாளரை காத்தமுல் ஹுக்காம் – மன்னர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. 

11) காத்தமுல் அவுஸியா: ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைக் குறித்து காத்தமுல் அவுஸியா – ஆலோசனை கொடுப்பவர்களில் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் மினாருல்ஹுதா, பக்கம் 106) 

12) காத்தமுஷ் ஷுஅரா: சிரியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அரபி கவிஞரும் எழுத்தாளருமான அபுஅலா அல்மெரி (கி.பி 973 - 1058) என்பவரைக் குறித்து கத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் முகத்தமா தீவானுல் முதனப்பி, எகிப்து, பக்கம் 4) 

காத்தமுல் முஹக்கிகீன்: அப்துல் பஸ்ல் அலூஸி என்பவர் காத்தமுல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுளார். (நூல்: ரூஹுல் மஆனி, முதற்பக்கம்) 

மேற்கண்ட சான்றுகள் இடம்பெற்றுள்ள நூற்களும், பத்திரிகைகளும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தால் வெளியிடப்பட்டவை அல்ல, மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச்சொல் சேரும்போது அதற்கு சிறப்பு என்ற பொருளே தவிர காலத்தால் இறுதி என்ற பொருள் இல்லை என்பதை ஆணித்தரமாகக் அறிவிக்கின்றன. 

இதிலிருந்து காத்தம் என்னும் சொல்லிற்குப் பிறகு இறைநேசர்களும், கவிஞர்களும், அறிஞர்களும், விரிவுரையாளர்கள் என்ற பன்மைச் சொல் வந்தால் அறிஞர்களுள் மிகச் சிறந்தவர், இறை நேரசர்களுள் மிகச் சிறந்தவர், கவிஞர்களுள் மிகச் சிறந்தவர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். நபிமார்களுள் காத்தம் என்பதும் நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றுதான் வரும். இறுதி நபி என்று பொருள் கொள்வது தவறாகும். என்று விளங்குகிறது.

அஹ்மது எனும் பெயரைக் கொண்ட தூதர்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 25 இல் முகம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

தவ்ராத், இன்ஜீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பு இருந்தது. (பார்க்க திருக்குர்ஆன் (7:157, 48:29, 61:6) என்று எழுதியுள்ளார்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன்  61:7 வசனத்தில் மர்யமின் மகன் ஈஸா தன் தமுதாயத்திடம் இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றக் கூடியவனாகவும் எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). பின்னர் அ(த்தூது)வர் தெளிவான சான்றுகளுடன் வந்த பொது இது மிகத் தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறினார்.

இவ்வசனத்தில் அஹமத் எனும் பெயர் கொண்ட ஒரு தூதர் என்பது முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று பி.ஜே கருதுகிறார். நபி (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மது என்றிருக்க அஹ்மத் எனும் பண்புப் பெயரைக் குறிப்பிட்டு ஈஸா நபி முன்னறிவித்ததாக எண்ணுகிறார். இதனால், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இந்த அஹ்மது என்பது தன்னைக் குறித்து கூறப்பட்ட முன்னறிவிப்பு என்று கூறியபோது பி.ஜே போன்றோர் அன்னாரை மறுத்தனர். இச்செயல், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைக் குறித்து தவ்ராத்தில் வந்த முன்னறிவிப்பை யூதர்கள் அது முஹம்மது நபிக்குப் பொருந்தாது என்று கூறியதைப் போன்றதாகும். அதாவது உபகாமம் 18:18-20 இல்,

இந்த வசனத்தில் கர்த்தர் மூஸா நபியிடம், உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்க தரிசியும் சாகக்கடவன் என்று வருகிறது. இதில்,

1) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது. அவர் மூஸா நபியைப் போன்ற ரஸுல் என்று (திருக்குர்ஆன் 73:16 வசனம்) கூறுகிறது.

2) அவர் இஸ்ரவேலர்களின் சகோதரர் இஸ்மவேலர்களிலிருந்து அதாவது இஸ்மாயீல் நபி (அலை) அவர்களின் சந்ததியில் இருந்து வருவார்.

3) அவர்க்கு திருக்குர்ஆன் எனும் வேத வஹி வரும்.

4) அவ்வேதத்தில் பிஸ்மில்லாஹ் என்று அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அதன் அத்தியாயங்கள் காணப்படும்.

5) அவர் எந்தச் செயலையும் அல்லாஹ்வின் பெயரைக் கூறியே செய்வார்.

இவ்வாறு தெளிவாகக் காணப்பட்டும் யூதர்கள், அந்தத் தீர்க்கதரிசி, மூஸா நபியின் சகோதரர்களாகிய இஸ்ரவேலர்களிலிருந்து வரவேண்டும். முஹம்மதோ, இஸ்மவேலர்களிலிருந்து வந்துள்ளார் என்று கூறி மறுத்து விட்டனர்.

இதைப் போன்றே முஸ்லிம்களும் அஹ்மத் என்பது முஹம்மது நபியைத் தான் குறிக்கும் என்று கூறி, இஸ்லாத்தின் பின்னாளில் முஹம்மது நபியைப் பின்பற்றி வரும் அன்னாருடைய அஹ்மத் என்னும் பண்பைக் கொண்ட உம்மத்தி நபியாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை மறுத்து வருகின்றனர்.

61:7 வசனத்தில் வரும் அஹ்மத் என்பவர், முஹம்மது நபியின் உம்மத்தில் பிற்காலத்தில் வரக்கூடியவர் என்பதைக் கான்போம்.

1) நம்பிக்கை கொண்டோர் என்பது திருக்குரானில் முஸ்லிம்களை மட்டுமே குறிக்க வருகிறது. இச்சொல், அந்த அத்தியாயத்தில் 3 இடங்களில் வந்து முஸ்லிம் சமுதாயத்தில் பிற்காலத்தில் வருபவரைப் பற்றியும் முஸ்லிம்கள் செய்யாததைச் சொல்லக் கூடாது என்றும் துன்பத்திலிருந்து காப்பாற்றும் ஒரு வியாபாரம் பற்றியும் முஸ்லிம்களிடம் எடுத்துச் சொல்கிறது.

2) மூஸா நபி முதல் ஈஸா நபி காலம் வரை யூதர்கள் அந்தந்த கால நபிமார்களிடம் நடந்து கொண்டது போல் உங்களிடம் வந்துள்ள அஹ்மத் எனும் தூதரிடம் நடக்கக் கூடாது என்று முஸ்லிம்களிடம் வசனத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

3) 61:8 வசனத்தில் அஹ்மத் என்னும்  தூதரை நீங்கள் இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பீர்கள் என்றும்: அவர்க்கு அநீதியிழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் முஸ்லிம்களிடம் 61:6-7 அல்லாஹ் கூறுகிறான்.

4) 61:9 இல் அஹ்மத் நபி கொண்டு வரும் அந்த இறையொளியை தம் வாய்களால் பத்வா கூறி அணைக்க முயல்வார்கள். ராபிதத்துல் ஆலமீன், பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற அமைப்புகள் பத்வாக்களை கூறி அஹ்மதின் இறை ஒளியை அணைக்க முயல்பவர்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

5) அன்னார் அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்வதற்காக வந்து, நேர்வழியையும், உண்மை மார்க்கத்தையும் நிலை நாட்டுவார் என்று 61:10 வசனம் கூறுகிறது. இது எதிர்காலத்தில் வரும் மஹ்தியின் காலத்தில் நடக்கும் என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். (தப்ஸீர் இப்னு ஜரீர், தப்ஸீர் ஜாமிஉல் பயான் தொகுதி 29)

6) 61:11-12 வசனம், பிற்காலத்தில் வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும் என்றும் அச்சமயத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய வியாபாரம் பற்றியும் அதனால் கிடைக்கும் கூலி பற்றியும் கூறுகிறான்.

7) 61:15 வசனத்தில் மூஸா நபியைப் போன்ற முஹம்மத் நபியின் உம்மத்தில், ஈஸா நபியின் சமுதாயத்தைப் போன்று ஒரு சமுதாயம் உருவாகும் என்றும் அவர்கள் ஈஸா நபியைப் போன்ற அஹ்மத் நபியைப் பின்பற்றுவோர் என்றும் மற்றொரு பிரிவினர் அவரை மறுத்து விடுவர் என்றும் கூறுகிறது.

8) 61:7 வசனம் ,

அ) ஈஸா நபி இஸ்ரவேல் சமுதாயத்திற்கு மட்டும் அனுப்பப்பட்ட ஒரு தூதர், அன்னார் முழு உலகுக்கோ, முஸ்லிம் சமுதாயத்திற்கோ வர முடியாது.

ஆ) ஈஸா நபி தவ்ராத்தை மெய்ப்பிக்க வந்த ஒரு தூதர், அவர் திருக்குரானை மெய்ப்பிக்க வந்த  தூதறல்ல.

இ) எனக்குப் பின்னர் என்று ஈஸா நபி கூறுவதினால், ஈஸா நபியின் மரணத்திற்குப் பிறகுதான் அஹ்மத் நபி தோன்றுவார்.

ஈ) மூஸா நபியும் முஹம்மது நபியும் வேதம் கொண்டுவந்த நபிமார்கள் என்றும் ஈஸா நபி தவ்ராத்தை அஹ்மது நபி திருக்குரானையும் மெய்ப்பிக்க வந்த தூதர்கள் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

61:1 வசனம், வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வைத் துதித்தன என்று வருகிறது. அல்லாஹ்வின் துதி இல்லாத காலத்தில் அத்துதியை மீண்டும் உண்டாக்கி அஹ்மத் – புகழக் கூடியவர், துதிக்கக் கூடியவர் வருவார் என்று கூறுகிறது.

தான் முழுக்க முழுக்க திருக்குரானையும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றியதால்தான் இறைவன் எனக்கு இந்த உம்மத்தி நபி என்ற பதவியைத் தந்தான், அதனை விட்டு விட்டு மலையளவு நல்ல அமல்களைச் செய்திருந்தாலும் இப்பதவி எனக்குக் கிடைத்திருக்காது. என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறியுள்ளார்கள். அன்னார் தன் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் புகழையும், நபி (ஸல்) அவர்களின் புகழையும் போற்றிப் புகழ்வதில் செலவிட்டார்கள்.

எனவே, பிற்காலத்தில் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களே இங்கு இஸ்முஹு அஹ்மத் என்று கூறப்பட்டவராவார்.

காரணம் 61 வது சூரா மூமின்களாகிய முஸ்லிம்களைக் குறித்து மட்டுமே பேசுகிறது. எனவே அஹ்மத் எனும் பெயர் முஸ்லிம்களில் தோன்றும் ஒரு தூதரைக் குறிக்குமே தவிர, முஸ்லிம்களுக்காகத் தோன்றும் தூதரைக் குறிக்காது. முஸ்லிம்களுக்காகத் தோன்றிய தூதர் முஹம்மது என்று திருக்குர்ஆன் நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர் இல்லை என்று கூறுவதற்காகத்தான் அவர் பெயர் என்று கூறி அஹ்மது என்று அழைத்துள்ளான். அவர் பெயர் என்று யஹ்யா நபியுடனும் (3:45) ஈஸா நபியுடனும் (19;8) வந்து, நற்செய்தி என்றும் கூறப்பட்டுள்ளது. இதர் நற்செய்தியைத் தான் ஈஸா நபி பிற்காலத்தில் இஸ்லாத்தில் தோன்றும் ஒருவராகிய அஹ்மது நபிக்கும் கூறுகிறார். எனக்குப் பின்னர் என்பது ஈஸாநபியின் மரணத்திற்குப் பிறகு என்பதைக் குறிப்பதால், அன்னார் மரணித்து விட்டார் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், ஈஸா மீண்டும் வந்து மரணித்த பிறகு ஒருவர் வருவார். அவர்தான் அஹ்மத் என்று எண்ணி ஏமாற வேண்டும்.

இந்த அதிகாரத்தின் இறுதியில் அல்லாஹ் ஒரு கட்டளையிட்டுள்ளான். ஈஸா நபி, தமது சீடர்களிடம் அல்லாஹ்வுக்காக எனது உதவியாளர்கள் யார் என்று கேட்ட போது நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்பவர்களாக இருக்கிறோம் என்று அந்த சீடர்கள் பதிலளித்தது போன்று நம்பிக்கை கொண்டவர்களே நீங்களும் பதிலளிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த கருத்து திருக்குர்ஆனில் 3:53 இல் செய்தியாக மட்டுமே வருகிறது. ஆனால் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்களின் வருகையைக் குறிப்பிடும் போது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு கட்டளையாகவே இடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மெய்ப்பிக்கும் ஒரு தூதராவார்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 95 இல் நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்னும் தலைப்பில் பி.ஜே கூறியிருப்பதன் சுருக்கமாவது:
உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பதுதான் உடன்படிக்கை. (திருக்குர்ஆன்: 3:81)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை இவ்வசனம் கூறுகிறது. இதில் உங்களிடம் ஒரு தூதர் வந்தால் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வசனம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வசனம் குறிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

இந்த இடத்தில் இவ்வசனத்திற்கு எதிராக முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையையும் சுட்டிக் காட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

கில்ரு நபி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஹயாத் நபி: அவர் பூமியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை தவறானது என்பதை இவ்வசனம் சந்தேகமற அறிவிக்கிறது.

கில்ரு நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் தூதராக அனுப்பபடுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி அவர் என்ன செய்திருக்கவேண்டும்? நபிகள் நாயகத்தை தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டபட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். இவ்வசனத்திலிருந்து கில்ரு நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 3:82-83 வசனத்தில் கூறப்பட்டபடி

1. எல்லா நபிமார்களிடமும் உடன்படிக்கையை எடுக்கிறான் திருக்குர்ஆன் 33:8 வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகிய நபிமார்களிடமும் இந்த உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

2. உறுதி மொழியாவது: வேதத்தையும் ஞானத்தையும் தந்த பின் அதை மெய்ப்பிக்கும் தூதர் (உண்மைப்படுத்தும் தூதர்) உங்களிடம் வருவார்.

3. அப்படி வந்தால், அவர் மீது ஈமான் கொண்டு, அவருக்கு உதவி செய்ய வேண்டும்.

4. இந்த உடன்படிக்கைப் புறக்கணிக்கின்றவர் வரம்பு மீறியவர்கள் ஆவர் என்று கூறுகிறது.

பி.ஜே ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இந்த வசனம் குறிக்கிறது என்கிறார். இது தவறு. எப்படி?

1. தூதரிடம் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் (அல்லாஹ்விடம்) எடுக்கின்ற உறுதிமொழி தான் என்று பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 334 இல் கூறுவதே அவர்க்கு பதிலாகும்.

2. உதாரணமாக் மூஸா நபிக்கு வேததையும் ஞானத்தையும் கொடுத்தபின், அவர் காலத்தில் உடன் இருந்த ஹாரூன் நபி வந்தார். அப்படி வந்தவர் அவற்றை மெய்ப்பிக்க வந்தார் என்று திருக்குரானோ நபிமொழிகளோ கூறவில்லை. வேதத்தையும் ஞானத்தையும் கொண்டு வந்தவர் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அதை உண்மைப்படுத்தும் தூதர் அவரிடம் ஏன் வர வேண்டும்?

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், இறைத் தூதர்கள் மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகிய இருவரும் (தற்போது) உயிருடன் இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு வழியில்லை. (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் 3:81 வசனத்தின் விளக்கம்) என்று கூறியுள்ளார்கள்.

3. வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்த வேண்டிய ஒரு காலகட்டம் வரும்போது மெய்ப்பிக்கும் தூதர் வரவேண்டுமே தவிர வேதத்தையும் ஞானத்தையும் கொண்டு வந்தவர் வாழும் காலத்தில் வர வேண்டிய தேவையில்லை, ஏனென்றால் அவரே அவற்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் அம்மக்களை அதன் வழியில் நடத்திக் கொண்டும் இருப்பார்.

4. திருக்குரானில் மெய்ப்பிக்கும் தூதர் என்று ஏறக்குறைய 3 இடங்களில் ஈஸா நபியைப் பற்றி கூறப்பட்டுள்ளது. (3:51,5:47,61:7) ஈஸா நபியோ தவ்ராத்தை மெய்ப்பிக்க மூஸா நபியின் காலத்தில் வரவில்லை. மாறாக 1400 ஆண்டுகள் கழிந்து தோன்றினார்.

பி.ஜே கூறுகிறார்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

இக்கருத்து முற்றிலும் தவறாகும். எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒருவர் நபியாக வருகிறார் என்றால்,

1. நபி (ஸல்) அவர்கள் அந்த நபி மீது ஈமான் கொண்டு அவர்க்கு நபி (ஸல்) உதவி புரிய வேண்டும்.

2. அந்த நபி, நபி (ஸல்) அவர்களின் வேதமாகிய திருக்குரானையும் அதன் ஞானத்தையும் (நபிமொழிகளையும்) உண்மைப் படுத்துவார். ஏனென்றால் உங்களிடம் வந்தால் என்றால் பி.ஜேயின் விளக்கத்தின்படி நபி (ஸல்) அவர்களிடம் வேறொரு தூதர் வந்தால் என்பதுதான் பொருள். இது சரியா?

முஸ்லிம்களும் கில்ரு நபியும்:

நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி கில்ரு நபி இறந்துவிட்டார். எனவே அவர் உயிருடன் இல்லை என்று பி.ஜே எழுதியுள்ளார் என்றால், ஈஸா நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பபடுகிறார்கள். என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தை தேடி ஈஸா நபி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் ஈஸா நபி இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

இவ்வசனத்திலிருந்து ஈஸா நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் திருக்குரானில் 33:8 வசனத்தில் உம்மிடத்தில் என்று நபி (ஸல்) அவர்களைக் குறித்தும் ஈஸா நபியிடத்தும் அந்த உடன்படிக்க வாங்கப்பட்டிருப்பதால் ஈஸா நபியின் உம்மத்தினர், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொண்டு அவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர் அவர்க்கு பிறகு வருபவரிடமும் ஈமான் கொண்டு அவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிகிறது.

(61:7, 5:47, 3:51 ஆகிய வசனங்கள்) இதில் 61:7 வது வசனத்தைக் காண்போம்.

மர்யமின் மகன் ஈஸா தன சமுதாயத்தினரிடம், இஸ்ராயீல் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை உண்மைப்படுத்தக் கூடியவனாகவும் எனக்குப் பின்னர் வரப்போகின்ற அஹ்மது எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறினார்.

உண்மைப்படுத்தும் தூதரின் இலக்கணத்தில் இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

1. ஈஸா நபி, மூஸா நபி வாழும் போது அவரிடம் வரவில்லை.

2. மூஸா நபியின் மறைவுக்குப் பின் வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்தக்கூடிய ஒரு காலகட்டத்தில் அதாவது 1400 ஆண்டுகள் கழித்து ஈஸா நபி வருகிறார்.

3. மூஸாவின் உம்மத்தில் தான் வருகிறார்.

4. இஸ்ரவேல் மக்களிடம் அவர்தான் இந்த வேதத்தை உண்மைப்படுத்த உங்களிடமிருந்து வந்த தூதர் என்று இறைவன் கூறுகிறான்.

5. தனக்குப் பிறகு – ஈஸாவின் மரணத்திற்குப் பிறகு உலகில் வரக்கூடிய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தியும் வழங்குகிறார். அதாவது அஹ்மது நபியைப் பற்றி.

திருக்குர்ஆன் 61:7 இல், ஈஸா நபி தனக்குப் பிறகு அஹ்மத் என்பவரைப் பற்றி நற்செய்தி கூறுகிறேன் என்று கூறுகிறாரே அவர் யார்?

61 வது அதிகாரம் அவர் முஸ்லிம் உம்மத்தில் வரக்கூடிய உம்மத்தி நபி என்று வருகிறது.

1. வானங்களிலும் பூமியிலுமுள்ளவை எல்லாம் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்தன என்று கூறி, இஸ்லாத்தில் நின்றுவிட்ட இறைத்தூயமையை மீண்டும் எடுத்துரைக்க வரக்கூடியவர்.

2. நம்பிக்கை கொண்டவர்கள் என்று திருக்குர்ஆன் முஸ்லிம்களைப் பார்த்துதான் அழைக்கிறது. இச்சொல் (61:3, 61:11, 61:15) இந்த அதிகாரத்தில் மூன்று இடங்களில் இடம்பெற்று முஸ்லிம்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த அத்தியாயம் முஸ்லிம்களைப் பற்றி பேசும் அத்தியாயமாகும்.

3. நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களிடம் பிற்காலத்தில் காணப்படும் நிலையைப் பற்றி வது 61 அதிகாரம் கூறுவதாவது: 61:4-5

அ) செய்யாததை சொல்லுதல். (61:3)

ஆ) இவ்வாறு சொல்லி இறைவனின் வெறுப்புக்கு ஆளாகுதல். (61:4)

இ) உறுதிவாய்ந்த ஒரு சுவரைப் போல் ஒரு வரிசையில் நிற்காமல், 72 பிரிவுகளாக பிறிந்து தமக்குள் சண்டைப் போடுதல். (61:8)

4. அஹ்மது நபியை – அந்த 72 பிரிவுகளும் நீர் இஸ்லாத்தில் இல்லை. அதற்கு வாரும் என்று அழைப்பார்கள். (61:8)

5. அஹ்மது நபி கொண்டு வந்த இறையோளியை ஆலிம்கள் தங்கள் வாய்களால் பத்வா – மார்க்கத்தீர்ப்பு கூறி அணைக்க முயல்வார்கள். அல்லாஹ்வோ அந்த ஒளியை முழுமைப் படுத்துவான்.

இவ்வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இருவகையான தோற்றங்கள் பற்றிய முன்னறிவிப்பு இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி மூஸா(அலை) செய்துள்ள முன்னறிவிப்பு நிறைவேறும். (உபாகமம் 18:18-20) என்பதும்.

எனக்குப் பின்னர் அஹ்மது என்னும் பெயர் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவர் என்பது, 62:4 இல் குறிப்பிடப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாவது வருகையைக் குறிக்கும். இது அஹமதிய்யா ஜமாஅத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் வருகையின் மூலம் நிறைவேறிற்று.

6. இணை கற்பிப்போம் (இதனை) எந்த அளவு வெறுத்தாலும் சரியே. அவனே தனது தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் – இதனை அவன் எல்லா மார்க்கத்தின் மீதும் வெற்றி பெற செய்வதற்காக அனுப்பினான். (61:10)

இந்த முன்னறிவிப்பு மஸீஹின் காலத்தில் நிறைவேறும் என்று தப்ஸீர்கள் கூறுகின்றன. இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் காலத்தில் இது நிறைவேறியது. அவர்கள் பிற மார்க்கங்களை விட இஸ்லாமே சிறந்தது என்பதை தம் பேச்சு, எழுத்து மூலம் நிரூபித்துள்ளார்கள்.

7. அக்காலத்தில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். (61:11) எந்த அளவுக்கு என்றால் உலமாக்கள். மார்க்கத்தை வியாபாரம் எந்த அளவுக்கு என்றால் உலமாக்கள், மார்க்கத்தை வியாபாரம் ஆக்கி காசேதான் கடவுளடா என்று வாழ்வார்.

8. 72 பிரிவுகளும் அல்லாஹ்வையும், அந்த அஹமத் நபியையும் நம்பாமலும் இறைவழியில் அறப்போர் செய்யாமலும் வாழ்வார்கள். இக்காலத்தில் தான் ஈஸா நபி நற்செய்தி கூறிய அஹமது எனும் மெய்ப்பிக்கும் தூதர் வருவார். எப்படி?

1
மூஸா
முஹம்மது (ஸல்)
2
தவ்ராத்
திருக்குர்ஆன்
3
1400 ஆண்டுகளுக்குப் பின் ஈஸா நபி   
1400 ஆண்டுகளுக்குப் பின் அஹ்மது நபி
4
தவ்ராத்தை மெய்ப்பித்தல்
திருக்குரானை மெய்ப்பித்தல்


எனவே, முழு உலகமும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்த உடன்படிக்கையின்படி. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது அலை அவர்களை ஏற்று, அவர்க்கு உதவி புரிய வேண்டும்.

மேலும் திருக்குர்ஆன் 62:4 இல் அவர்களுடன் சேராத  மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்) என்று வருகிறது. இந்த வசனத்திற்கு ஹதீஸில் இவ்வாறு வருகிறது.

ஹஸ்ரத் முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இங்கு கூறியுள்ள மற்றவர்கள் என்பவர் யார் என்று கேட்டார்கள். அதற்கு, அவர்கள் ஹஸ்ரத் சல்மான் பார்ஸி(ரலி) அவர்களின் தோளில் கைவைத்து, நம்பிக்கை ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரை சென்றுவிட்டாலும் பாரசீக இனத்தைச் சேர்ந்த இவரின் தொன்றல்களுள் ஒருவர அல்லது பலர் அதனைத் திரும்பக் கொண்டு வருவர் என்று பதிலளித்தார்கள். (புகாரி 4897)

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் சல்மானுள் பார்ஸி வம்சத்தில் தோன்றியவர்கள் ஆவார்கள்.

அப்துல் வஹ்ஹாப் அடிக்குறிப்பு எண் 262 இல்

12000 பேர் கொண்ட மக்கத்துப் படைக்கும் 3000 பேர் கொண்ட முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த போர் அகழ்ப் போர். 12000 பேரை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் தன் நாபிச் தோழரிடம் ஆலோசனை செய்தார்கள். அப்போரை சல்மான் பாரிஸ்(ரலி) அவர்கள், மதீனாவைச் சுற்றி ஒரு அகழ் வெட்டி எதிரிகளைத் தடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

10 முழம் ஆழமும், 40 முழம் அகலமும் கொண்ட ஒரு அகழியை வெட்டினார்கள் 25 நாட்கள் முற்றுகை நீடித்தது. இறுதியில் முற்றுகையை கைவிட்டு எதிரிகள் திரும்பினர். அப்போது அன்சார் தோழர்கள் சல்மானு மின்னா (சல்மான் பாரிஸ் எங்களை சேர்ந்தவர்) என்றும் முஹாஜிர்கள் (சல்மானு மின்னா) என்றும் கூறினார்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சல்மானு மின்னா அஹ்லுல் பைத் – சல்மான் எம்மைச் சேர்ந்தவர். எம் குடும்பத்தினர் என்று கூறினார்கள்.